நாகை அருகே பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு பணியை முடித்து விட்டு வந்துள்ளார். அங்கு சென்று கொண்டிருந்த பிரவீனாவை நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவகுமார் என்பவர் தடுத்து நிறுத்தியதோடு கீழே தள்ளியுள்ளார்.
அதன் பின் பிரவீனாவிடம் மோசமாக நடந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அங்கிருந்து தப்பி ஓடிய பிரவீனா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். பெண் போலீசிடமே, போலீஸ்காரர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.