4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காவல்துறையினர் சிறுமி தங்கியிருக்கும் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது அந்த பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர் ஒருவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரின் வீட்டில் சோதனை செய்தபோது கழிவறையின் முன்பு ரத்தக் கறையுடன் ஒரு மூட்டை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தபோது அதில் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் “சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது தான் அன்பாக பேசி அவரை அழைத்து வந்து வீட்டினுள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் பின்னர் சிறுமியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குப்பையில் போட்டு கட்டியதாகவும்” அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு நடந்த கொடூரத்தை கேள்விப்பட்ட அவரின் குடும்ப நபர் ஒருவர் பினாயில் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.