கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வாசுகி நகர் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக கட்டி வரும் வீட்டு கட்டுமான பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துக்குனாசாகு மற்றும் பிரசன்னகுமார் ஜனா போன்றோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் துக்குனாசாகு பகலில் கட்டிட தொழிலாளியாகவும், இரவில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசன்னகுமார் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்திற்கு தனது மூன்று நண்பர்களுடன் மது குடிக்க வந்துள்ளார். இதனால் கோபத்தில் துக்குனாசாகு பிரசன்னாவை தட்டிக் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரசன்னகுமார் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தூங்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கோபத்தில் இருந்த துக்குனாசாகு பிரசன்னகுமாரின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து விட்டார். இதனையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அதிகாலையில் சென்ற துக்குனாசாகு நடந்த அனைத்து விவரங்களையும் கூறி சரணடைந்து விட்டார். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரசன்னகுமாரின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.