பெரம்பலூர் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் சங்கர் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி சென்றார். லாரி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி டிரைவர் திடீரென லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் பொருட்களை வாங்கிவிட்டு லாரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்துகொண்டிருந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சங்கரின் மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாடாலூர் காவல்துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்திற்கு காரணமான டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.