நாகையில் செங்கல் தயாரிப்பதற்கு உரிய மண் கிடைக்காததால் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடவூர் நிர்த்தனமங்கலம், சங்கமங்கலம், ஒரத்தூர் ஆகிய இடங்களில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் செங்கல் அதிக அளவில் தயாரிக்கப்படும். தற்பொழுது செங்கல் தயாரிக்க நாகை மாவட்டத்தில் மண் கிடைக்கவில்லையாம். இதனால் செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் அந்த தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். இதுகுறித்து தொழிலாளி ஒருவர் கூறியதாவது;-
ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை செங்கல் தயாரிப்பு பணி சிறப்பாக இருக்கும். நாங்கள் வசிக்கும் பகுதியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது அந்த நீர் கடைமடை பகுதிக்கு வருவதற்குள் செங்கல் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துவிடும். இந்த செங்கல் சூளைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தச் செங்கல் சூளைகளில் தயாரிக்கப்படும் செங்கல் திருத்துறைப்பூண்டி, நாகை வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. ஆற்றிலிருந்து எடுக்கக் கூடிய சவட்டு மண்ணோடு, புழுதி மண்ணை கலந்து செங்கல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் குளைத்த நிலையில் மண்ணை அச்சுகளில் போட்டு கல் அறுக்க தொடங்கப்படுகிறது. அதன்பின் கற்களை காயவைத்து சூளையில் அடுக்கி வைக்கப்பட்டு தீ மூட்டப்பட்டு வேக வைக்கப்படுகிறது.
அதன்பின் கற்கள் சரியான பக்குவத்தில் எடுத்து விற்பனைக்காக வெளியூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது செங்கல் தயாரிக்க போதுமான அளவு மண் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். சென்ற வருடம் செங்கல் ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து செங்கல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது. இதனால் அரசு செங்கல் தயாரிப்புக்கு ஏற்ற மண் குவாரியை தொடங்க வேண்டும் என்றும், எங்களுக்கு பிழைப்பதற்கு நல்ல வழி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏப்ரல், மே மாதங்களில் கோடை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அப்போது வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கல் தார்பாய் போட்டு மூடி இருந்தாலும் மழை நீரில் கரைந்து விடுகிறது. இதனால் மழைக்காலங்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.