அந்தியூரில் ஒருபுறம் 10 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு, மற்றொருபுறம் 18 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் ஜீவ நதியான காவிரி ஆறு ஓடுகிறது. புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் அதனை ஒட்டி நடக்கின்ற குதிரை சந்தையும் உலகப்புகழ் பெற்றவை. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர், தாமரைக்கரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
முதன்முதலாக அந்தியூர் தொகுதி 1962ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் சட்டமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 7 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜ கிருஷ்ணன் என்றபர் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,13,877 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண்களை வாக்காளர்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர். அந்தியூரில் பிரதான தொழிலாக வேளாண்மை தொழில் விளங்குகிறது. அதற்கு அடுத்ததாக விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில்கள் உள்ளன. அந்திவூரில் 7 ஏரிகள் இருந்தாலும், பெரும்பாலான விவசாய நிலம் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. மேட்டூர் வலது கரை உபரி நீர் பாசனத் திட்டம் மணியாச்சி பள்ளம் திட்டம், கோடி மடுவு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வருகிறது. அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
அந்தியூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படவேண்டும், பர்கூர் மலை வாழ் மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் என தொகுதி மக்களின் கோரிக்கை நீள்கிறது. மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகள் நுழைவதால் பாதிப்பு ஏற்படுவதும், யானை போன்ற விலங்குகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதும் தொகுதி மக்களின் தீராத பிரச்சினையாக இருக்கிறது. நீண்ட கோரிக்கை பட்டியலுடன் சட்டமன்ற தேர்தலை அந்தியூர் தொகுதி மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.