கட்டுப்பாட்டை இழந்த லாரியானது கவிழ்ந்த விபத்தில் தாய் மகள் இருவரும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை வெப்பலம்பட்டி பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரியை ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் வடிவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது வெப்பலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்குள்ள கடை முன்பு கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் அந்த கடையில் இருந்த வெப்பலம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஜோதிமணி என்பவரும், அவரது மகள் சந்தியாவும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அருகில் உள்ள அவர்கள் இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஊத்தங்கரை காவல்துறையினர் லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.