தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது பெயரில் சொந்தமாக நிலம், வீடு இல்லை என்று சொத்துப்பட்டியலில் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், அ.தி.மு.க.வின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் நேற்று முன் தினம் அவருடைய சொத்து பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலில் வீடு, நிலம் போன்ற எந்த அசையா சொத்துக்களும் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வங்கி இருப்பு ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 698, கையிருப்பு ரூ. 23 ஆயிரத்து 500, ரூ. 67 ஆயிரத்து 440 மதிப்பில் 16 கிராம் நகையும், ரூ. 48 லட்சத்து 85 ஆயிரத்து 424 மதிப்பில் 3 வாகனங்கள், ரூ. 65 லட்சத்து 55 ஆயிரத்து 411 கடனை தனது மனைவிடம் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். ரூ. 4 கோடியே 57 லட்சத்து 52 ஆயிரத்து 415 மதிப்பிலான அசையும் சொத்துகள், ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி பெயரில் இருப்பதாகவும், ரூ.2 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2016-ஆம் ஆண்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது சொத்துப் பட்டியலில் ரூ. 33 லட்சத்து 20 ஆயிரத்து 529 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 25 லட்சத்து 734 மதிப்பில் கடன் இருப்பதாகவும் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். தற்போது ரூ. 2 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 746 மதிப்பில் மனைவிக்கு கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரூ. 98 லட்சம் மதிப்புள்ள அசையா அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், ரூ. 22 லட்சத்து 44 ஆயிரத்து 545 மதிப்பில் அசையும் சொத்துக்களும் 2016-ஆம் ஆண்டில் தனது மனைவி பெயரில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஐந்து வருடங்களில் மனைவியின் சொத்து ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் விவசாயத்தின் மூலம் மனைவிக்கு வருமானம் கிடைப்பதாகவும் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்.