வௌவாலின் உடலிலிருந்து உருமாறிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான ஆய்வை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ பல்கலைக்கழகம் செய்தது.
அந்த ஆய்வில் , ” கொரோனாவின் உருமாற்றம் வௌவால்களிடமிருந்து மனித இனத்திற்கு பரவியது என்று தெரியவந்துள்ளது. வௌவால்களிடமிருந்து வெளிவந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்காக சிறிய அளவில் தன்னை உருமாற்றிக் கொண்டது. பொதுவாக ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினத்திற்கு பரவிய ஒரு நுண்ணுயிர் அந்த உடலில் வாழ வேண்டுமென்றால் அது தன்னை உருமாற்றம் செய்ய அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
ஆனால் வௌவால்களிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ் மனிதர்களிடம் வேகமாக பரவும் வகையில் உரு மாற்றமடைந்துள்ளது. மேலும் வௌவாலின் உடலில் இருந்து வெளியேறிய கொரோனா வைரஸ் பெரிய அளவில் உருமாற்றம் ஏதும் அடையாமல் சிறிய அளவிலேயே உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு பரவுகிறது” என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.