லண்டனில் பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் பலர் திரண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் சாரா எவரார்ட் என்ற இளம்பெண் காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டத்தினை காவல்துறையினர் கையாண்ட விதத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சுமார் 5 மணி அளவில் பெரும்பாலான மக்கள் கூட்டமாக திரண்டனர்.
மேலும் காவல்துறையினரின் முன்பே அவர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள். இதற்கிடையில் காவல்துறையினர், பாராளுமன்றத்தின் அருகே மக்கள் கூடுவது முறையானது அல்ல. எனவே தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து நீதி கேட்டு பொதுமக்கள் போராடிய அதேசமயத்தில், காவல்துறையினர் மற்றும் உள்விவகார செயலருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கோரினர். ஆனால் போரிஸ் அரசு அந்த மசோதாவை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கும் அதிகமான அதிகாரம் வழங்குவதில் உறுதியாக உள்ளது. மேலும் இதுபோன்ற மசோதாக்கள் ஜனநாயகத்தின் உரிமைகளை ஒடுக்குவதாக இருக்கிறது என்று சில மக்கள் கூறுகின்றனர்.