காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் 1 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் வசித்து வரும் முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகன் முகம்மது முஷரப் என்பவர்களுடன் தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென முகமது முஷரப் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் புளியங்குடி காவல் நியையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் விசாரித்து வந்த காவல்துறையினர் காணாமல் போன சிறுவனை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு அச்சிறுவனை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து கவனமாக இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு புகார் அளித்த ஒரு மணிநேரத்திற்குள் புளியங்குடி காவல்துறையினர் காணாமல் போன சிறுவனை சாமர்த்தியமாக கண்டுபிடித்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.