Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வென்ற தொகுதியாகும். ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்கா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் புகழ்பெற்ற தலமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து கடலாடி தொகுதி நீக்கிவிட்டு முதுகுளத்தூர் தொகுதியை தொடர தேர்தல் ஆணையம் அறிவித்தது. வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் முதுகுளத்தூரில் முக்கிய தொழிலாக விவசாயமே உள்ளது.

சட்டமன்ற தொகுதியில் பார்வர்டு பிளாக் 2 முறையும், சுதந்திரக் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் 3 முறை போட்டியிட்டு வென்று உள்ளனர். திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 2 முறை தொகுதியை வசமாக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் தொகுதியைக் கைப்பற்றியுள்ளனர். தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியின் எஸ் பாண்டி.

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,04,594 ஆகும். தொகுதியில் உள்ள முக்கிய நதிகளான குண்டாறு மற்றும் வைகை ஆகியவை பெரும்பாலும் வறண்டே  காணப்படுகின்றன. பரமக்குடி ராமநாதபுரத்திற்கு கூட வைகை நதி நீர்  கிடைத்தும் முதுகுளத்தூர் தொகுதிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பது தொகுதி மக்களின் ஆதங்கம். வறண்டு கிடக்கும் விளை நிலங்களில் வளரும் கருவேல மரங்களை வெட்டி விவசாயிகள் பிழைப்பு நடத்திவருகின்றனர்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய்கள் சேதம் அடைந்து பராமரிப்பின்றி உள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக  கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எந்த தொழிற்சாலையும் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி மூடப்பட்ட கப்பல் உடைக்கும் தளத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

பெரும் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்ற வாக்குறுதியுடன் கமுதியில் அமைக்கப்பட்டுள்ள அதானி சோலார்  நிலையத்தில் உள்ளூர் இளைஞர்கள் ஒருவருக்கு கூட பணி வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூக்கையூரில் அவசரகதியில் திறக்கப்பட்டுள்ள மீன் பிடி துறைமுகம் விரிவுபடுத்தபடுமா என்ற கேள்வியோடு மீனவர்களும் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |