தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது மேட்டூர் சட்டமன்ற தொகுதி. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு தண்ணீர் கொடுப்பது இங்குள்ள மேட்டூர் அணைதான். அனல் மின் நிலையம் நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பிரஜா சோசியலிஸ்ட் கட்சிகள் தலா இரு முறையும் வென்றுள்ளன.
திமுக, பாமக, தேமுதிக மற்றும் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். அதிகளவாக அதிமுக 6 முறை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தொகுதியின் தற்போதய எம்எல்ஏவாக முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளார்கள். ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ள மேட்டூர் தொகுதியில் மொத்தம் 2,85,767 வாக்காளர்கள் உள்ளனர்.
கொளத்தூர், அந்தியூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசனம் பெற வழி செய்யும் தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பண்ணவாடி பரிசல் துறையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும் கோரிக்கை. மேட்டூர் அணை மீனவர்கள் கூடாரம் அமைக்க தார்பாலின்கள் வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகள் உள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி தொழிலாளர்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட வில்லை என்றும் நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் கலந்து வரும் கழிவு நீரால் மக்கள் கடுமையாக பாதிக்கப் படுவதாகவும், இதற்கு எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேச்சேரி பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொகுதியில் அமையவேண்டிய நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் போன்றவை எம்எல்ஏ செம்மலையின் அலட்சியத்தால் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயம், தொழிற்சாலைகள், விசைத்தறிக் கூடங்கள் என பன்முகத்தன்மை கொண்ட மேட்டூர் தொகுதியில் மேட்டூர் அணை பூங்கா, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் போன்றவை சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லை என்றும் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்