கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவே சாகுபடி செய்யப்பட்டுள்ள கொண்டைகடலைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முக்கோணம், புக்குளம், கணபதிபாளையம், குடிமங்கலம் போன்ற பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவம் தவறி மழை பெய்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பனிகடலை என அழைக்கப்படும் கொண்டைக்கடலை மார்கழி மாதத்தில் தான் பூக்கள் பூத்து நன்கு செழித்து வளரும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் மழை பெய்ததால் பூக்கள் உதிர்ந்து பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த பயிர்களை அறுவடை செய்யும் எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 2500 ரூபாய் வாடகை கொடுப்பதாகவும், ஏக்கருக்கு 25 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மிக குறைந்த மகசூல் அளவு கிடைத்துள்ளதால் அறுவடை செலவு கூட கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 85 முதல் 95 நாட்களில் அறுவடை செய்யக் கூடிய இந்த கொன்டகடலையானது 400 முதல் 500 கிலோ வரை மகசூல் செய்யப்படும் அளவில், இந்த ஆண்டு 150 கிலோவுக்கும் குறைவாக மகசூல் இருப்பதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே அறுவடை பணிகளை வேளாண் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.