திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி முக. ஸ்டாலினிடம் அறிமுகம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆறு வேட்பாளர்கள் என்பதைவிட ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற நம்பிக்கையோடு இந்த தேர்தல் களத்தில் இறங்குகின்றோம்.
நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது, இரண்டு அணிகளுக்கு இடையிலான, பதவிக்கான போட்டி அல்லது அரசியல் அதிகாரத்திற்காக போட்டி என்று நாங்கள் பார்க்கவில்லை. எந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுவது என்கிற அதிகாரத்திற்கான போட்டி என நாங்கள் கருதவில்லை. இரண்டு அணிகளுக்கான இந்த போட்டி என்பது மதசார்பின்மைக்கும், மதவாதத்திற்கு இடையிலான ஒரு மக்கள் யுத்தம் என்றே இதை பார்க்கிறோம்.
சமூக நீதியை பாதுகாக்க, ஜனநாயகத்தை பாதுகாக்க, மதச்சார்பின்மையை பாதுகாக்க, திமுக தலைமையிலான இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி களமிறங்குகிறது. இந்த மண்ணில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வாரிசு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்கிற வகையில் தமிழ் மண்ணை சமூகநீதி மண்ணாக பக்குவப்படுத்தி உள்ளார்கள். அதனால்தான் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக இங்கே சாதி வெறியர்களுக்கு, மதவெறியர்களுக்கு அரசியல் களத்தில் காலூன்ற முடியாத ஒரு நெருக்கடி ஏற்பட்டது.
ஜெயலலிதா அம்மையாரும், கலைஞரும் இல்லாத நிலையில் அதிமுகவை பயன்படுத்தி சாதியவாத, மதவாத, சனாதன சக்திகள் காலூன்றி விட வேண்டும் என்று பகிரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பிஜேபி என்கிற அரசியல் இயக்கமும் அதனை பின்னிருந்து நூறு விழுக்காடு இயக்கிக் கொண்டிருக்கின்ற சங்பரிவார் அமைப்புகளும், கலைஞர் இல்லாத சூழலை பயன்படுத்தி, ஜெயலலிதா அம்மையார் இல்லாத சூழலை பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் சக்தியாக இங்கே பரிணாமம் பெற்று விட வேண்டும் என்று துடிக்கின்றனர்.
இந்த நிலையில் தான் அவர்களுக்கு இங்கே இடமில்லை என்று விரட்டி அடிக்கக்கூடிய ஒரு மகா யுத்தத்தை திமுக தலைமையிலான கூட்டணி நடத்த இருக்கிறது. அந்த களத்தில், யுத்தகளத்தில், தேர்தல் களத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் 6 வேட்பாளர்களும்… 6 படை என்று சொல்லக்கூடிய வகையில் 6 படைகளாக… வரலாறு படைப்பவர்களாக களம் இறங்குகின்றோம் என திருமாவளவன் தெரிவித்தார்.