மதுரை மாவட்டத்தில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார் . இது நெல் அறுவடை காலம் என்பதால் தனது வயலில் பயிரிட்ட நெற்பயிர்களை அறுவடை செய்துவிட்டு வைக்கோலை மாட்டுத்தீவனத்திற்காக ரஞ்சித்குமார், வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் படப்பாக ஒன்று சேர்த்து வைத்துள்ளார் . இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் படப்பு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது.
இதனை கவனித்த ரஞ்சித் குமார் சோழவந்தானைச் சேர்ந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அலுவலர் ஸ்ரீநிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள் . இந்நிலையில் கொழுந்துவிட்டு எரியும் வைக்கோல் படப்பை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக போராடி தீயை அணைத்து, மென்மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.