தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அதிமுக கூட்டத்தில் பாஜக கொடி கட்டப்படாததால் பாஜகவினர் அந்த கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பாஜகவை அதிமுக மதிப்பதில்லை என்று பாஜகவினர் குற்றம் சாட்டிவிட்டு கூட்டத்தை புறக்கணித்தனர். பிரச்சாரம் துவங்கி சில நாட்களே ஆன நிலையில் தமிழக அரசியல் கூட்டணியின் குளறுபடிகள் தொடங்கிவிட்டன.