புதுக்கோட்டையில் நெல் கொள்முதல் செய்யாமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ரெகுநாத புரத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தான் வருடம் தோறும் விற்பனை செய்துவருவார்கள் . இதனைத் தொடர்ந்து தற்போது கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை என்று கூறி பணி நிறுத்தப்பட்ட காரணத்தால், விவசாயிகள் கடந்த 40 நாட்களாக சாக்கு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் .
ஆனால் நாற்பது நாட்கள் கடந்த பின்பும் சாக்கு இன்று வரும் நாளை வருமென்று காலம் தாழ்த்துவதுமட்டுமின்றி பணியாற்றும் ஊழியர்களும் விடுமுறை எடுத்து சென்று விட்டதாக கூறுகின்றனர் . இதனால் கடும் ஆத்திரமடைந்த விவசாயிகள் கரம்பக்குடி- தஞ்சாவூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கரம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மேலும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆகியோர் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்பொழுது விவசாயிகள் அதிகாரிகளிடம் நடந்ததை கூறி கண்ணீர் வடித்தனர் . இதனைதொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளை சமாதானபடுத்தி இரண்டு நாட்களுக்குல் நெல் கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்ததனால் விவசாயிகள் சாலை மறியலை களைத்து அங்கிருந்து புறப்பட்டனர்.