மதுரை ரயில் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண் பயணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர்.
மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பூர்ணிமா இறங்கவில்லை. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில் இயக்கப்படும் நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக இறங்க முற்பட்டபோது தவறி பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்து சிக்கி கொண்டார்.
இதையடுத்து அவர் அலறல் சத்தம் இட பயணிகள் இதைப் பார்த்து அவசர அழைப்பு செயினை பிடித்து இழுத்தனர்.இதனால் சுதாரித்த ஓட்டுநர் ரயிலை லாவகமாக நிறுத்தினார். பின்னர் ரயில்வே போலீசார் வந்து பூர்ணிமாவை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் மீற்க முடியவில்லை. இதையடுத்து பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேர போராட்டத்தின் பின் பிளாட் பாரத்தை உடைத்து பூர்ணிமாவை மீட்டனர்.
இதையடுத்து பூர்ணிமாவை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து மதுரை வரக்கூடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாக இயக்கப்பட்டன.