ரத்த சோகை மற்றும் பட்டினியின் காரணமாக வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெட்டிகொட்டை காப்பு காட்டுப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மயில் மொக்கை சரகத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டுள்ளனர்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க இந்த பெண் யானை இறந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பாகங்கள் சோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த யானை ரத்த சோகை மற்றும் தீவனம் இல்லாத காரணத்தால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.