ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தனது ஆட்டோவில் பெண் தவறவிட்ட 2 1/2 பவுன் தங்க சங்கிலியை நேர்மையாக ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ரமேஷ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12 மணி அளவில் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் 3 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு ரமேஷ் ஆட்டோவை பார்த்துள்ளார். அப்போது சீட்டில் கிறிஸ்தவ டாலருடன் 2 1/2 பவுன் தங்க சங்கிலி கிடந்துள்ளது.
இதுகுறித்து துடியலூர் ஊர் காவல் படை அதிகாரிக்கு ரமேஷ் தகவல் தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆட்டோவில் பயணம் செய்த செட்டி வீதி பகுதியில் வசித்து வரும் ராணி பிரிசில்லா என்பவர் தங்க சங்கிலியை ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் தங்க சங்கிலியை ராணியிடம் கோயம்புத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஒப்படைத்துள்ளார். மேலும் சிறப்பாக செயல்பட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த ரமேஷை காவல்துறையினர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.