தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக சார்பாக போட்டியிடும் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து பேசிய அவர், “தோல்வி என்ற பேச்சுக்கே என் அகராதியில் இடமில்லை, ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால் திமுக ஏன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும். நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எப்போதும் எனக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.