சிவகங்கையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஆயிரவைசிய திருமண மகால் உள்ளது. இந்த மகாலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர்கள் ராஜபிரதீப், சிலம்பரசன் ஆகியோர் சின்னங்கள் மற்றும் கட்சி கொடிகள் அடங்கிய வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி கூட்டமாக நின்றுள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா தொற்று நடைமுறை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர்.
இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் வடக்கு குரூப் கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அ.தி.மு.க. ஒன்றிய தலைவர்கள் ராஜபிரதீப், சிலம்பரசன் மற்றும் அவர்களுடன் இருந்த பலர் மீதும் காவல்துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.