காரின் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் சீனிவாச ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் இவர் லோயர் பஜாரில் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது காரின் உள்ளே பார்த்தபோது 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து சீனிவாச ராவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.