நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் ஆதிவாசி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக பகுதியில் முதுமலை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு உள்ள புலியாளம், கோழி மலை, நாகம்பள்ளி போன்ற பல்வேறு குக்கிராமங்களில் ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் அங்குள்ள சில கிராமங்களில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்வதால் ஆதிவாசி மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். இதனையடுத்து முதுமலை வன ஊழியர்கள் அந்த கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் அடிக்கடி விரட்டியடித்தும், அவை தொடர்ந்து ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து முதுமலை ஊராட்சி ஆதிவாசி மக்கள் கூறும் போது, இவ்வாறு காட்டு யானைகள் ஊருக்குள் வரும் இடங்களில் புதிதாக அகழிகள் தோண்ட வேண்டும் எனவும், ஏற்கனவே உள்ள அகழிகளை முறையாக ஆழப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் விரட்டியடிக்கும் காட்டு யானை அடுத்த கிராமத்திற்குள் நுழைந்து விடுவதால் எந்த நேரத்திலும் மீண்டும் தங்களது கிராமத்தில் நுழையும் அச்சம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.