குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சித்தம்பலம் ஊராட்சி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் வீட்டு மனை இடத்தின் உரிமையாளரான அங்காத்தாள் என்பவர் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அங்காத்தாள் தரப்பினர் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை பணியாளர்கள் மீண்டும் துவங்கியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டுமான பணிகளை நிறுத்தி விட்டு தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட சித்தம்பலம் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பல்லடம்-உடுமலை சாலையில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் திட்டப் பணிக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.