திருநெல்வேலியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்ற இருவரை காவலர்கள் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம் பண்ணையில் ராஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருச்செந்தூர் செல்வதற்காக நெல்லையிலிருந்து புறப்படும் திருச்செந்தூர் பஸ்ஸில் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து சிறிது தூரம் சென்று பாளையங்கோட்டையை தாண்டிருக்கிறது . அப்போது ராஜம்மாள் இருக்கும் சீட்டின் அருகே இரு பெண்கள் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இரு பெண்களும் சக பயணிகள் கவனிக்காத நிலையில் ராஜம்மாள் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ராஜம்மாள் உஷாராக இருந்ததால் கத்தி கூச்சலிட்டுள்ளார் .
இதனால் பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து திருட முயன்ற இரு பெண்களையும் கையும் காலுமாக பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவலர்கள் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு பெண்களையும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவலர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.