கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதியில் புகழ்பெற்ற பாம்பாறு அணை உள்ளது. விவசாயத்தை சார்ந்துள்ள இந்த பகுதியில் மா, குண்டு மல்லி, நெல், காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. நான்கு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இந்த தொகுதியின் வழியே தான் செல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரும் அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை இருந்த ஊத்தங்கரை தொகுதி அதன்பிறகு அரூர் தொகுதியில் இணைக்கப்பட்டது.
இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டு கடந்த இரு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் வென்று அதிமுகவின் மனோரஞ்சிதம் எம்எல்ஏவாக 10 ஆண்டுகளாக உள்ளார். ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ள ஊத்தங்கரை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,37,070. அரசு கலைக்கல்லூரி, மகளிர் காவல் நிலையம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். நலிவடைந்த கூட்டுறவு நூற்பாலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புனிதமான அனுமந்த் தீர்த்தத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் மக்களின் பிரதான கோரிக்கை. ஊத்தங்கரை தொகுதியில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். விளைபொருள்களை பதப்படுத்த கிடங்குகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மாம்பழ கூல் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என நெடுங்காலம் கோரிக்கையாக உள்ளது. வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்துகின்றனர். நீர்நிலைகளை தூர் வாரவும், மேம்படுத்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூ சாகுபடி அதிகமாக உள்ள ஊத்தங்கரை தொகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். 10 ஆண்டுகளாக ஆளும்கட்சி சேர்ந்தவர் எம்எல்ஏவாக இருந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.