பெண்கள் பனை ஓலையில் இருந்து வித்தியாசமான கைவினைப் பொருட்களை தயாரித்து அசத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதம் வரை பனையிலிருந்து பதநீர் எடுத்து தொழிலாளர்கள் கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவர். இதனை அடுத்து சீசன் முடிந்ததும் பனை ஓலையில் இருந்து விதவிதமான மிட்டாய் பெட்டி, கீ செயின்கள் போன்ற பல வகையான பொருட்களை அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தயாரிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறும்போது, வியாபாரிகள் பனை ஓலையில் தயாரான மிட்டாய் பெட்டிகளை வாங்கி செல்வதாகவும், இனிப்புக் கடையில் மிட்டாய் வைத்து விற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளாக பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பெண்கள் குடிசைத் தொழிலாக பனை நாரில் இருந்து பலவகையான கைவினைப் பொருட்களை தயாரிப்பதாகவும், பனை ஓலையில் இருந்து பொருட்கள் தயாரிக்க பயிற்சி பள்ளிகள் துவங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.