தமிழ் இசை வளர்த்த மூவர்களான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்த பிள்ளை பிறந்த ஊர் சீர்காழி. திரையிசையில் புகழ் பெட்ரா சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊரும் இது தான். நவகிரக தளங்களில் புதன் தலமான திருவெங்காடு, செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஆகியவை இங்கு உள்ளன. விவசாயம் மற்றும் மீன் பிடித்தல் பிரதான தொழில்களாக உள்ளன. சீர்காழி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறை தொகுதியை கைப்பற்றி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். தொகுதியின் தற்போதைய அதிமுக வின் பி.வி. பாரதி. சீர்காழியில் மொத்தம் 2,51,779 வாக்காளர்கள் உள்ளனர். விசைப் படகுகள் சேதம் அடைவதை தடுக்க பழையார், திருமுல்லைவாசல் பகுதிகளில் முகத்துவாரத்தை தூர்வாரி தடுப்பு சுவர் அமைத்து தரவேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் மற்றும் உப்பனாற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும் மாதானம், மேமாத்தூர் இடையே கீழ் குழாய் பணிகள் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பிரம்பு மற்றும் பாய் தயாரிப்பு தொழில்களும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் பிரம்பிற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது. பிரம்பால் தயாரிக்கப்படும் கலைப்பொருட்கள் மற்றும் நாற்காலிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்றும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வலியுறுத்துகின்றனர். முற்றிலுமாக சேதம் அடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.