நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இருந்த பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்டது கீழ்வேளூர் தனித்தொகுதி. 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் போது இத்தொகுதி உதயமானது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகிய தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளன. கிராம பகுதிகளை அதிக அளவில் கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த திருப்புகழை கீழ்வேளூர் தொகுதியில் தான் உள்ளது.
கிறிஸ்தவர்களின் புகழ் பெற்ற தலமான வேளாங்கண்ணி மாதா ஆலயம் இங்குதான்அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவும் வெற்றிபெற்றன. தற்போதய எம்எல்ஏ திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன். கீழ்வேளூர் பகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,79,264 பேர். வெள்ள பாதிப்புகளை தடுக்க அணை கட்ட வேண்டுமென்பதும், நெல் உலர்தளம் அமைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை. உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும். அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கீழ்வேளூர் நகர், வல்வளம் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடற்கரை சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், கடற்கரை இணைப்பு சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தொகுதியில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால் அரசு பாரபட்சம் காட்டுவதாக எம்எல்ஏ மதிவாணன் குற்றம்சாட்டியுள்ளார். கீழ்வேளூர் தொகுதியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும், பிற மாநிலங்களுக்கு மீன்களை அனுப்பும் வசதியாக ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மக்கள் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.