நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி விவசாயிகள், மீனவர்கள், உப்பள தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. விடுதலை போராட்டத்தின் போது வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு காய்ச்சும் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருத்துறைபூண்டி தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1962ஆம் ஆண்டு வேதாரண்யம் தொகுதி உருவானது. அதிகளவாக திமுக 6 முறை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. 3 முறை அதிமுக தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கைத்தறித்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,92,563. உப்பை மூலப்பொருளாக கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை உருவாக்கப்படும் என 110 விதியின் கீழ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது வெற்று அறிவிப்பாகவே உள்ளது. கஜா புயலுக்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பும் என்னவானது என்றே தெரியவில்லை.
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் வேண்டுகோள். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக தொடங்கப்பட்ட அகல ரயில் பாதை அமைக்கும் பணி 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லை பூ சாகுபடி செய்யப்படுவதால் வாசனை திரவிய தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இந்த தொகுதியில் தூண்டில் வளைவு அல்லது சிறிய துறைமுகம் ஒன்றை கட்ட வேண்டும் என்பதும் மீனவர்களின் விருப்பமாக உள்ளது.
தலைஞாயிறு ஒன்றியத்தை தனி தாலுகாவாக்கி பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை ஆகியவை அமைக்க வேண்டும் என்பதும் பொதுவான கோரிக்கை. அதிக அளவில் மா உற்பத்தி செய்யப்படும் நிலையில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை அப்படியே நீடிக்கிறது. கஜா புயலில் சேதமடைந்த வேட்டைகாரணிருப்பு நெல் சேமிப்பு கிடங்கை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.