ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை பகுதியில் வேண்டாம்மாள் (வயது 58) என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ம் தேதி ஆஸ்துமா அதிகரித்து மிகுந்த அவதிக்குள்ளான வேண்டாம்மாள் பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேண்டாம்மாலுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மறைமலைநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.