பாஜக மாநிலத் தலைவர் முருகன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மக்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்தினார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். அதன்படி பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, அதற்கான வைப்புத்தொகை ரூ.5000 செலுத்தப்பட்டது. அந்தத் தொகையில், ரூ.4000 அளவுக்கு 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளும், ரூ.1000-க்கு ஐந்து மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களும் கொடுக்கப்பட்டன. மக்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை வேட்புமனு வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.