விடுதலைப் போராட்டத்தின் போது வ. உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் இயக்கிய ஊர் தூத்துக்குடி. இந்தியாவின் 12 பெரும் துறைமுகங்களில் ஒன்றாகவும் தூத்துக்குடி துறைமுகம் விளங்குகிறது. தூத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி தொகுதியின் முக்கிய தொழில்களாக இருக்கின்றன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதன்பின் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது திமுகவின் கீதாஜீவன் எம்எல்ஏவாக உள்ளா. தூத்துக்குடி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,84,164 ஆகும். தூத்துக்குடியில் மாநகராட்சி என்பதற்கான உள்கட்டமைப்போ, போக்குவரத்து வசதிகளோ முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று புகார் உள்ளது. தூத்துக்குடி ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஒன்றாம் மற்றும் இரண்டாம் கேட் பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கைகள் தேவை என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதும், போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகள். மழைக் காலங்களில் தொழில் பாதிப்பு ஏற்படுவதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அறிவித்தபடி அரசு வேலை வழங்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கிய கோரிக்கை.
பக்கிள் ஓடையை மழைநீர் வடிகாலுடன் இணைத்து சீர்அமைக்க வேண்டும் என்பதும் வேண்டுகோள். அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை. தூத்துக்குடிக்கு நாள்தோறும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான லாரிகளை நிறுத்துவதற்கு உரிய இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்துகின்றனர்.