தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவியுள்ள பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் இதுவரை ஆறு பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக 29 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை பிருந்தாவனம் பள்ளியில் 14 பேருக்கும், தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளியில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கோரோணா பரவியதால் இரண்டு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.