Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். விவசாயம் கால்நடை வளர்ப்பு தீப்பெட்டி உற்பத்தி முக்கிய தொழில்களாக உள்ளது. கோவில்பட்டி கடலைமிட்டாய் தனி சுவையும், தனி புகழும் கொண்டது. நூற்பாலை, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்களும் இங்கு உள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை வேட்பாளர் 1 முறையும் வென்றுள்ளன.

அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளார். கோவில்பட்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,64,900 ஆகும். தீப்பெட்டி தொழில் ஜிஎஸ்டி வரியால் நலிவடைந்து உள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தீப்பெட்டிக்கு தேவையான மூலப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கடலை மிட்டாயை அரசு கொள்முதல் செய்து பள்ளி மாணவர்களுக்கான சத்துணவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்ட கூடுதல் பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும்.

வேளாண் விளைபொருள்களை சேமிக்க குளிர்சாதன கிடங்கு மற்றும் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கை. கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். சமணர்கள் பள்ளி உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ள கழுகுமலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு மாவட்ட அளவிலும் தேசிய அளவிலும் வீரர்களை வழங்கிய கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் கோருகின்றனர்.

Categories

Tech |