தேர்தலை காரணமாக வைத்து திருவிழா நடத்த கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருவிழா தொடங்குவதற்கு முன்பு மாடு பிடித்து வந்து பூஜை செய்த பின்பே கம்பு நாட்டப்பட்டு திருவிழா தொடங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மாடு பிடிப்பதற்கு நாளை செல்வதாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் திருவிழா நடத்தக்கூடாது என்றும் திருவிழா நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியானது ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி விழாவிற்கு தடை விதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும் மேலும் அனுமதி தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காவல் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என அவ்வூரின் தலைவரை அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு பொது மக்கள் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.