தமிழகத்தில் பொது தேர்வில் இல்லாத 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் இதுவரை ஆறு பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் அளிக்கவில்லை. இந்நிலையில் மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்,பொதுத்தேர்வு இல்லாத 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.