சென்னையில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றி தங்கச் செயினை ஒருவர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், தாண்டவராயன் தெருவை சேர்ந்த வீரசின்னம்மாள் (வயது 65). இவர் கடந்த 15ஆம் தேதி தண்டையார்பேட்டை மார்க்கெட்டிற்கு, மீன் வாங்குவதற்காக சென்றார். இந்நிலையில் ஒரு வாலிபர் அந்த மூதாட்டியிடம் உங்களுடைய மகன் போஸின் நண்பன்என்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதை நம்பிய மூதாட்டி அவரிடம் பேசினார். இதையடுத்து பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வாலிபர் என்னுடைய மைத்துனருக்கு திருமணத்திற்காக தாலி செயின் ஒன்று செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். அதற்கு உங்கள் தாய் செயின் போல டிசைன் இருக்க வேண்டும் என்றும், நீங்கள் என்னுடன் தாலி செய்யும் கடைக்கு வந்து உதவ வேண்டும் என்று கூறினார்.
இதை நம்பியதால் அந்த வாலிபருடன் மூதாட்டி, நகை செய்யும் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த இடத்தில் கூட்டமாக இருந்ததால் ,இந்த கொரோனா காலத்தில் வயதானவர்கள் நீங்கள் வரவேண்டாம் என்றும் ,உங்கள் செயினை மட்டும் மாடலுக்கு கடைக்காரரிடம் காண்பித்து விட்டு வருவதாக கூறினார். இதனால் மூதாட்டி தன்னுடைய தாலி செயினை அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். வெகு நேரமாகியும் அந்த வாலிபர் வராததால், தன்னை ஏமாற்றி விட்டார் என்பதை உணர்ந்துகொண்ட மூதாட்டி ,உடனடியாக வீட்டிற்குச் சென்று நடந்ததை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதன்காரணமாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டரான சுகுணா சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். இதில் மூதாட்டி வீரசின்னம்மாள் ,இளைஞருடன் பைக்கில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. எனவே அந்த பைக்கின் எண்ணை வைத்து போலீசார் அந்த திருடனை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் ,கைது செய்யப்பட்டவர் சிவக்குமார் (வயது 41 )என்றும் ,சென்னை கோடம்பாக்கத்தில் ,பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் இதுபோலவே 2 மூதாட்டிகளிடம் நகை பறித்து உள்ளார் என்பதும், விசாரணையில் தெரிய வந்தது. இவரிடமிருந்து சுமார் 16 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.