பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு கனடா ஆதரவு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் ஆக்ஸ்போர்டடு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால் குறிப்பிட்ட சில நாடுகள் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தற்காலிகமாக தடையை விதித்தது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்று கூறியது. இதனால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளும் மீண்டும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவிற்கும் அந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கனடா சுகாதாரத்துறை அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.
கொரோனாவிலிருந்து பாதுகாப்பதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் நன்மைகள் அதிகமாகவே இருக்கிறது என்று கனடா மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். கனடாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு மட்டுமே பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்திய சீரம் நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் 5,00,000 டோஸ்களை கனடா பெற்றுள்ளது. மேலும் நடப்பு ஆண்டின் மே மாதத்திற்குள் 1.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை கனட அரசு வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.