Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் விவசாயத்தை முழுமையாக சார்ந்துள்ள பகுதியாகும். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை உள்ளடக்கிய தொகுதியாகும். சுதேசி கப்பலை இயக்கிய வ.உ. சிதம்பரனார் பிறந்த ஊர் இதுதான். வீரன் வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரை தந்ததும் ஓட்டப்பிடாரம் தான். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சுதந்திரா கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

திமுக 2 முறை தொகுதியை கைப்பற்றியது. காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. தற்போது திமுகவின் சண்முகையா எம்எல்ஏவாக உள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் 2,50,053 வாக்காளர்கள் உள்ளனர். மழை காலங்களில் கொம்பாடி ஓடை வழியாக மழைநீர் கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. குளங்கள் கண்மாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளை பொருட்களை சேமிக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். காற்றாலை நிறுவனங்கள் விளை நிலங்களுக்குள் கனரக வாகனங்களை இயக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஒட்டப்பிடாரத்தில் அரசு பேருந்து பணிமனை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். அரசு கலைக்கல்லூரி உருவாக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள்.

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ஒட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் தேவை என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவைப் போற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உருவாக்கிய நினைவு கோட்டை பராமரிப்பின்றி புதர்கள் படிந்து கிடைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. குறுக்குச்சாலை, நான்கு வழிப் பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |