குஜராத்தில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து டிக் டாக் எடுத்த வீடியோ வைரலானதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டத்திலுள்ள லங்நாச் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் அர்பிதா சவுத்ரி. அடிக்கடி டிக் டாக் செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் இவர் தாமும் இதுபோன்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் சீருடை இல்லாமல் காவல் நிலையத்தில் லாக்கப் அருகே நின்று இந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இதை வீடியோவாக எடுத்து டிக் டாக் செயலியில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆனது. காவல் நிலையத்தில் பொறுப்பில்லாமல் காவலர் ஒருவர் இப்படி ஆடலாமா என்று அவருக்கு எதிராக கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் பெண் காவலர் அர்பிதா சவுத்ரியை இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மஞ்சிதா கூறுகையில், பணியின்போது சீருடை இல்லாமல் இருக்கிறார். அதோடு காவல் நிலையத்திற்ள் நின்று வீடியோ எடுத்துள்ளார். காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை மீறியுள்ளார். அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/DeshGujarat/status/1154034717831753729