இந்தியாவின் தெற்கு முனையில் கடை கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவரின் பிரம்மாண்ட சிலை தமிழரின் பெருமையின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன.
கன்னியாகுமரியின் தற்போதய எம்எல்ஏ திமுகவின் ஆஸ்டின். கன்னியாகுமரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,92,433 ஆகும். கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவு துறை, ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் முறையான தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் நல்ல நிலையில் இல்லை என்பதும் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுவதாக பாதிப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
முக்கிய குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணையை தூர் வார வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாடுகள் மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. மலர்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பதும், பூக்கட்டும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பெரும்பாலான நாட்களில் படகு போக்குவரத்து இயக்கப்படுவது இல்லை என தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டு உள்ளது. பல்வேறு போராட்டங்கள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர்.