கனடாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிலுள்ள மொன்றியல் பகுதியில் ஒரு நபர் அதிகாலையில் சுமார் 5.25 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலை ஓரமாக ஒரு டாக்ஸி நின்றுள்ளது. இதனைக்கண்டு அதன் அருகில் சென்று வாகனத்தின் உள்ளே பார்த்திருக்கிறார். அதில் அவர் பார்த்த காட்சியால் பதறிப்போய், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதாவது டாக்ஸி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த 52 வயது நபர் மற்றும் அவரின் அருகில் அமர்ந்திருந்த 40 வயது பெண் ஆகிய இருவரும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இருவரையும் வேறு யாராவது கொலை செய்தார்களா? அல்லது ஒருவரையொருவர் தாங்களே குத்திக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்களா? என்பது குறித்த எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. எனவே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அருகில் இருக்கும் குடியிருப்புகளில் கிடைக்குமா? என்ற சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.