Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளச்சல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதி கடல் சார்ந்த பகுதி ஆகும். பண்டைய காலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய குளச்சல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. குளச்சல் மற்றும் முட்டம் கடற்கரைகள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலையாக கருதப்படுகிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிகப் பழமைவாய்ந்த இரணியல் அரண்மனை இங்குதான் அமைந்துள்ளது. குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் சுயேட்சை உறுப்பினர் தலா 1 முறை கைப்பற்றியுள்ளனர். திமுக மற்றும் அதிமுக தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ காங்கிரஸின் பிரின்ஸ். குளச்சல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,67,245ஆகும்.

மீனவ மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. முழுமை பெறாது தூண்டில் வளைவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கை பேரிடர்களின் போது கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை காக்க போதுமான ஏற்பாடுகள் இல்லை என்பதும் மீனவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலைகள் முறையாக செப்பனிடபடவில்லை என்றும் தொகுதிவாசிகள் புகார் கூறுகின்றனர். ஏவிஎம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொட்டல்காடு பகுதியில் கடல் சீற்றத்தின் போது ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

தொகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், தொகுதி பிரச்சினைகளுக்காக அதிகமுறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

Categories

Tech |