குன்றம் என்பதே குன்னம் என மருவியதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. தமிழ் இலக்கியத்திற்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சுவாமிநாதன் இளம்பருவத்தில் வளர்ந்த பகுதி இது. சங்ககால நாகரிகத்தைப் பறை சாற்றும் தொல்லுயிர் எச்சங்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. நீட் தேர்வால் மருத்துவ கனவை இழந்து உயிர் நீத்த அனிதா வாழ்ந்த பகுதியும் இதுதான்.
விவசாயமும், விவசாய பணிகளும் இல்லாத காலங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளை இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகின்றன. வரகூர் தொகுதியாக இருந்து மறுசீரமைப்பில் குன்னம் தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. இதுவரை திமுக 5 முறையும், அதிமுக 7 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் ஆர்.டி. ராமச்சந்திரன்.
குன்னம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,73,695 ஆகும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குளறுபடிகள் காரணமாக ஆலந்தூர், குன்னம், வேப்பூர் பகுதி தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக புகார் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழி பண்ணை அமைத்தவர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளதால் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்காததால் நாட்டு வெல்லம் உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள், தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளில் பின்தங்கிய உள்ளதாகவும் தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு, வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலையே நீடிப்பதால் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மருத்துவகல்லூரி சிறப்பு, பொருளாதார மண்டலம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்ற சாட்டு உள்ளது. மருதை ஆற்றை தூர்வாரி கொட்டரை நீர் தேக்க திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதும், செந்துறை ஊராட்சியை பேரூராட்சி ஆக தரம் உயர்த்த வேண்டும். முந்திரி தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.