பேருந்தை இயக்குவது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு சிவகாசியில் இருந்து அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் வந்துள்ளது. இந்த பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த உடன் பேருந்தை இயக்குவது தொடர்பாக இரண்டு ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலையத்தில் இருந்து எந்தப் பேருந்தும் வெளியே செல்ல முடியாத வகையில் அரசு பேருந்தை குறுக்கே நிறுத்தி விட்டார்.
இவ்வாறு பேருந்தை குறுக்கே நிறுத்தியதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிவோர் மிகுந்த சிரமப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.