100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கடற்கரையில் மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை பகுதியில் இருக்கும் கடற்கரையோரத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மணல் சிற்பம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட சிற்பத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலை குறிக்கும் வண்ணம் தமிழக வரைபடமும், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை குறிக்கும் வண்ணம் இந்திய வரைபடமும் அமைந்துள்ளது.
இதனை அடுத்து இந்த சிற்பத்தில் தலைமைச் செயலகத்தின் முகப்பு தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி 100% வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை திண்டிவனம் சப் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, பள்ளியின் தலைமையாசிரியர் அன்னபூரணி, மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். அதில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்குரிமை ஜனநாயகத்தின் கடமை என்பதை நினைவில் வைத்து 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்துவோம் என்றும் உறுதிமொழி மேற்கொண்டனர்.