குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சிறுத்தைப்புலி நாயை கவ்விச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று குன்னூரில் உள்ள ரயில்வே காலனி பகுதியில் புகுந்து விட்டது. இந்த சிறுத்தை அந்த காலனியில் வசிக்கும் நாராயணன் என்பவரது வீட்டு வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை கவ்வி இழுத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில் காலையில் நாராயணன் நாயை தேடிய போது அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் காயங்களுடன் நாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அப்பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் விரைந்து வந்து சிறுத்தை புலியின் நடமாட்டத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.